Tuesday, September 16, 2008

வளரும் தமிழகம் – 1

நமது அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு. இன்றைய சூழலில் நம்முடைய உணவு உற்பத்தி தேவையை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது. இயற்கையும் மாறி மாதம் மும்மாரி கிடைப்பதில்லை, அக்னி நட்சத்திரம் முடிந்து நான்கு மாதங்கள் ஆனாலும் அனல் கக்கும் வெயில் குறையவில்லை, ஆற்றில் நீரில்லை அல்லது வெள்ளமாக வந்து அனைத்தையும் அடித்துச்செல்கிறது. ஓசோனில் ஓட்டை, பருவங்களில் மாற்றம், அறுவடைக்கு தயாராகும்பொழுது வரும் மழை, தேவையான உரமின்மை, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வளமிழந்த நிலங்கள், உழவர் தொழிலில் வருமானம் குறைந்ததால் நிலத்தை கட்டிடங்களுக்கு தாரை வார்த்துவிடும் உழவர்கள் போன்ற காரணங்களால் நம்முடைய உணவு உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உழவர்கள் கரும்பும் குறுவை நெல்லுமே அதிகமாக விளைவிக்கின்றனர் மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே நல்ல நெல்ரகங்கள் பயிரிடுகின்றனர் அதுவும் தங்களுடைய சொந்த தேவைக்காக பயிரிடுவோர் கணிசமானோர்.

இந்த நிலைமை மாற என்ன செய்யலாம்?
முதலில் நல்ல நீர் பாசன வசதிகள் வேண்டும், கரிகாலன் கட்டினான் காவிரிக்கு கரையும் அணையும், பராந்தக சோழனால் கட்டப்பட்டது வீரநாராயணன் ஏரி (சென்னைக்கு நீர் வழங்கும் வீராணம் ஏரி), இது போல பல்லவர் காலத்திலும் பல ஏரிகள் கட்டப்பட்டன(இன்னமும் அவைகள் சென்னை மாநகரத்தை சுற்றிலும் இருக்கின்றன). நீரின்றி அமையாது உலகு என்பது போல தண்ணீருக்கான ஆதாரங்கள் நிறைய ஏற்படுத்த வேண்டும். (எங்க ஏரியெல்லாம் தான் அடுக்குமாடி குடியிருப்பாவும், பொறியியல் கல்லுரியாவும், தொழிற்சாலையாவும் மாறிடிச்சேனு நீங்க கேக்கறது என் காதுல விழுது, அது போனால் போகட்டும்னு விடுங்க. யார் யார் எந்த எந்த ஏரியில ஆக்கிரமிப்பு பண்ணியிருக்காங்கன்னு பார்த்துகிட்டு இருந்தம்னா அதுக்கே நேரமெல்லாம் சரியா போயிடும் அப்புறம் வளர்ச்சிப்பணிகள் முடங்கி போயிடும். அதுக்காக அப்படியே விட்டுட முடியாது). முதலில் எங்கெங்கு எல்லாம் ஏரிகள் இருந்தன என்று கண்டறிய வேண்டும், அதில் கட்டிடமான பகுதிகளை இடிக்க நேரமில்லை, மேலும் அந்த பணியை கையில் எடுத்தால் தேவையில்லாமல் பணமும் பொருளும் நேரமும் விரையமாகும் அதுமட்டும் அல்லாது பலரின் எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் அதனால் நம்முடைய ஆக்கப்பூர்வமான பணிகள் நிச்சயம் பாதிக்கப்படும். மற்ற இடங்களில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்து அதற்குண்டான நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் தடையில்லாமல் வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டிடங்கள் இருந்தாலும் அங்கு மழைநீருக்கென தனியாக மூடிய, மூடாத வாய்க்கால்கள், புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் அந்தந்த ஏரிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். இதில் மிகுந்த கவனம் கையாளப்பட வேண்டும் ஏனெனில் கழிவு நீர் துளியும் கலந்துவிடக்கூடாது. இரண்டாவது ஆறுகள், நம் தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லை, அதோடல்லாமல் நம் நதிகளுக்கு வரும் நீர் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்தே வருகிறது. நம் நதிகள் அவர்களை நம்பி மட்டும் இல்லை என்ற நிலை மாற வேண்டும். இது சாத்தியமா? ஏன் இருக்கக்கூடாது? நம் தேசத்தில் பெய்யும் மழை நீர் எங்கு செல்கிறது ஏதாவது ஒரு ஏரிக்கோ அல்லது ஆறுக்கோதானே அப்புறமென்ன பெரிய ஆறுகளில் கலக்கும் சிற்றாறுகள், காட்டாறுகள், மற்ற நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தையும் சீர்படுத்துவோம் தடையின்றி அவை ஆறுகளை சென்றடைய செய்வோம், பிறகு நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து தடுப்பணைகள், பெரிய நீர்த்தேக்கங்கள் செய்வோம். இதனால் நம் நீர்ப்பற்றாக்குறையும் தீரும், நீரிலிருந்து ஓரளவு மின்சாரம் தயாரிக்கவும் ஏதுவாகும்.


இவைமட்டும் அல்ல நம் ஊரில் ஆலயங்கள் அருகில் இருக்கும் குளங்கள், குட்டைகள், மழைக்காலத்தில் நீர் அதிகமாக தேங்கும் தாழ்ந்த பகுதிகள் போன்றவற்றை கண்டறிந்து அவைகளை செப்பனிட வேண்டும். இவ்வாறு செய்வோமெனில் நிலத்தடி நீரின் அளவும் அதிகமாகும், அதில் உள்ள மாசு குறையும், மழையும் அதிகமாகும், நம் தண்ணீர் பிரச்சினையும் தீரும்.

இப்பொழுது ஆறு, ஏரி, குளங்கள் தயார் பிறகென்ன நம் பயிர் நிலங்களுக்கு செல்லும் கால்வாய்கள், சிறு வாய்க்கால்கள், மதகுகள் ஆகியவற்றை செப்பனிட வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய திறமையான துடிப்புள்ள, நேர்மையான, கடமை தவறாத பணியாளர்கள் வேண்டும். இதற்கான இளைஞர்களை கல்லூரியில் இருந்தே உருவாக்க வேண்டும். கல்லூரி படிக்கும் காலத்திலேயே தேவையான துறைகளில் உள்ள மாணவர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுத்து பயிற்சிகள் வழங்க வேண்டும் (வெறும் தேர்வு முறை உதவாது) அதில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர்களை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். கல்வி முறையும் மாற வேண்டும், இன்றைய நிலையில் இருப்பதை விட ஏட்டுக்கல்வியாக இல்லாமல் செயல்முறை கல்வியாக மாற வேண்டும். கல்வியின் பொழுதும், பயிற்சியின் பொழுதும் கடமை தவறாமை, நேர்மை தவறாமை வலியுறுத்தப்பட வேண்டும், மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் (இந்த கல்வி முறைகளை பின்னால் பார்க்கலாம்). இதையெல்லாம் செய்வதற்கு பணத்திற்கு எங்கே போவதென்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது, இன்று நடை பெரும் பணிகளுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்துதான், உ.ம். உலக வங்கி, ஆசிய வங்கி போன்றவற்றிடம் இருந்துதான். என்ன மேலும் கடனுள்ள நாடாகிவிடுமேன்னு பார்க்கறீங்களா அதெல்லாம் ஒன்றும் ஆகாது, இன்னும் சில காலங்களில் உணவு இன்றிருக்கும் தங்கத்தை விடவும் எண்ணையை விடவும் மதிப்புள்ளதாகும் அந்த சமயத்தில் நாம் உணவு உற்ப்பத்தியில் முதலிடத்தில் இருப்போம். இப்பொழுதே நாம் தாயாராகிவிட்டால் உணவில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதியும் செய்தால் இந்த கடன் எல்லாம் விரைவில் நம் முதல் ஆகி விடும். பிறகென்ன இன்றைய அரபு நாடுகள், மேற்க்கத்திய நாடுகள், அமெரிக்காவை விட வளாமான நாடு நம்முடையதுதான்.

இதனை செய்வது யார்?
உணவுக்கென தனி துறை உருவாக வேண்டும் (உணவு துறை) இந்த துறையின் கீழ் நீர்ப்பாசன துறை, குடிநீர் துறை, வேளாண்மை துறை போன்றவை உள் துறைகளாக இருக்க வேண்டும். ஒரே துறையின் கீழ் இருந்தால் ஒன்றுக்கொன்று சுலபமாக செய்திகள் பரிமாற்றம் நடைபெற ஏதுவாக இருக்கும் மேலும் ஒரு உள் துறையின் தேவையை மற்றொரு உள் துறை ஒரே தலைமையின்கீழ் மிகவும் சுலபமாக பூர்த்தி செய்ய இயலும்.

1 comment:

sarancivil said...

sir, Article is Super to Read But for Implementation that too in Tamil nadu its Very difficult among Our Political Parties (this is in My point of View)
I convey my Regards for Creating Such a Nice Article...................................